இன்றைய சிறுகதை 14-04-2023. "இந்தாங்கோ" - நதுநசி

#short story #Tamil #Tamil People #Jaffna #Lanka4 #சிறுகதை #தமிழ் #யாழ்ப்பாணம் #மக்கள் #லங்கா4
இன்றைய சிறுகதை 14-04-2023. "இந்தாங்கோ" - நதுநசி

"இந்தாங்கோ" ஒற்றைச் சொல்.
***************************************************

அன்று நேரம் மாலையாகி விட்டது.சூரியன் மேற்கில் இறங்கத்தொடங்கி விட்டான்.
எல்லா இடங்களிலும் இருள் மெல்லப் பரவத் தொடங்கியது.
தாசன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான்.
விடிந்ததும் வீடுகட்டும் வேலைக்கு கொத்தானார் கூட்டம் வந்து விடும்.அத்திவாரக் கல் கொஞ்சம் தேவைப்பட்டது.

தாய்மாமனிடம் இருந்த  சிறு உழவியந்திரத்தில் கல் ஏற்றி வர எண்ணிணான்.தாய்மாமனாக இருந்தாலும் எல்லாமே அங்கு அவனது தாய் வழிச்சொல்லில் தான் நடக்கும்.
தாசனின் தாயோ மறுப்புத் சொல்ல கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான் தாசன்.

" விடிந்ததும் வேலைக்கு கருங்கல் வேண்டும். மேசன் வந்திடுவான்.
எப்படியாவது கல்லை ஏற்றி போட வேண்டும்."

தனக்குள் தானே சொல்லிக்கொண்டு தாயை மீண்டுமொரு முறை மாமானிடம் கேட்டுப்பார்க்கச் சொன்னான்.

" பகல் முழுதும் வேலை செய்தது.தொடர்ந்து வேலை செய்தால் உழவியந்திரம் பழுதாகிடும்.எதென்டாலும் நாளைக்குத் தான் இனி அவன் வருவான்.நீ வேணுமென்டால் வேறு யாரையும் பிடி." தாய் உறுதியாக சொல்லி விட்டாள்.

அன்றைய சூழலில் எல்லோரிடமும் கேட்டு விட்டான்.எல்லா வாகனங்களும் வேலையோடு இருந்தன.சிலர் விரைவாக வேலையை முடித்து விட்டு வந்து ஏற்றிக் தருவதாக சொன்ன போதும் தாசனின் தாயார் தடுத்து விட்டார்.
தாசனுக்குத் தெரியாது அவர்களிடம் போய் ஏற்றிக்கொடுக்க வேண்டாம் என சொல்லியிருக்கிறார்.அவர்கள் கடைசி வரை வரவேயில்லை.

நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.இரவு ஏழு மணியாச்சு.இருக்கிற ஒரே வழி மாமானிடம் மட்டுமே போய் கேட்பது.
தாயிடம் இது பற்றி பேசாது தானே நேரில் சென்று கேட்டு விட்டான்.

அந்த சூழலில் நீண்ட நேரமாக கள்ளுக்கு காசு தேடிக்கொண்டிருந்த அவனது மாமனுக்கு இது வசதியாகப் போய் விட்டது.

"ஏத்துக்காசு போக கள்ளுக்கு புறப்பா காசு தருவியென்டால் வாறன்."
  
" ஓம்.தாறன்.வந்து ஏத்தித் தாங்கோவன்."

"நீ இப்ப காசைத் தா.களளுக்கு போட்டு வந்து ஏத்துறன்."

எதுவும் பேசாது காசை எடுத்து நீட்டினான் தாசன்.

மெல்லச் சிரித்தவாறு கள்ளுப்போத்தலை எடுத்து வைத்த கைப்பையோடு வந்து காசை வாங்கி சட்டைப்பையில் வைத்து விட்டு சுறுசுறுப்பானவராக தன் ஈருருளியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து எட்டு மணியை எட்டியிருக்கும்.அப்போது தான்  வந்து சேர்ந்தார்.

" காலமைக்கு ஏத்துவமன்.நலலா நேரமும் போட்டுது.நான் கட்டாயம் வந்து ஏத்தித் தருவன்." என்று சாட்டுச் சொல்லி கடந்த முயன்றவரை தாசன் விடவில்லை.

"இப்பவே ஏத்துவம்.காலமைக்கு வேலைக்கு கல் வேணும்."

சினந்து கொண்ட தாய்மாமன்.புறப்பட்டார்.

" நான் போறன்.சந்திக்கு வாங்கோ.அங்க தான் கல் கிடக்குது.அயந்தண்ணை வீட்டுக்கு முன்னால்."

" சரிடா.போ. வாறன்."

தாசன் கருங்கல்  குவியலடிக்கு வந்திருந்தான்.ஏத்துவதற்கு ஏற்றால் போல் கற்களை எடுத்து பரப்ப நினைத்தவன்.கற்களை தூக்கி போட ஆயத்தமானான்.

அப்போது ஓடி வந்த அயந்தண்ணை தாசனை தடுத்து நிறுத்தினார்.

" ஏன் கல்லை எடுக்கிறாய்? "

கொஞ்சம் அதட்டலாக கேட்டார்.பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்திருந்ததல்லவா? அப்போதைய சூழலில் கருங்கல்லுக்கான தேவை அதிகம் இருந்தது.எல்லா இடங்களிலும் வீட்டுத்திட்டம்.வீடு கட்டும் வேலை  ஆரம்ப நிலையில் இருந்தது.எல்லோருக்கும் அத்திவாரக் கல் தேவைப்பட்டது.

அயந்தண்ணை நினைத்திருப்பாரோ என்னவோ? தாசன் கல்லை களவு எடுப்பதாக....

அந்தக் கல்லை அவரது அண்ணணின் மனைவியான கௌசியக்கா தான் வியாபாரம் செய்வதற்காக பறித்திருந்தார்.

தாசன் கல்லை பெரியதம்பி என்ற ஒரு கால் இல்லாத அந்த முயற்சியாளரிடம் தான் கேட்டிருந்தான்.அவர் தான் இவனுக்கு கௌசியக்காவிடம் இருந்து வாங்கிக் கொடுக்கிறார்.

இடைத்தரகர் தான் பெரியதம்பி.தாசனுக்கு நேரடியாக யாரும் எதுவும் கொடுக்க மறுத்து வந்திருந்தனர்.அந்தளவுக்கு அவனை அன்று வறுமை வாட்டிக்கொண்டிருந்தது.ஏதாவது கொடுத்து அதற்கு அவன் பிறகு காசு தராது விட்டால் ஏன் வீண் பிரச்சனைகள்.அதனால் தான் யாரும் எதையும் கொடுக்க முன் வரவில்லை.

பெரியதம்பி தொழில் முன்னனுபவமற்றவன்.அதனால் தாசனுக்கு கல்லை கொடுக்க முன் வந்து விட்டான்.

அயந்தண்ணையிடம் " பெரியதம்பி தான் ஏத்தச் சொன்னவர்..அதனால் தான் வந்தேன்." என்றான்  தாசன்.

" இது கௌசியக்காவின்ர கல்லு.என்னை பாத்துக்கொள்ளச் சொன்னவா? எதுக்கும் நான் ஒருக்கா அவருக்கு அழைப்பு எடுத்து  கேட்டு விட்டுச் சொல்லுகின்றேன்."

என்று கூறிக்கொண்டு கௌசியக்கவை தன் கைப்பேசியில் அழைத்தார்.
அவரும் உடன் அழைப்புக்கு பதிலளித்தார்.அமைதியாக நின்றிருந்த தாசனின் பிரச்சினையை சொன்னார் அயந்தண்ணை.

" தாசனுக்கா!   அவனுக்கு நான் குடுக்கவில்லை.நீ ஏத்த விடவேண்டாம்." சொல்லி முடிக்கவும் பெரியதம்பி அந்த இடத்துக்கு வரவும்  சரியாகி இருந்தது.

" என்ன அயந்தண்ணா.
நான் தான் ஏத்தச் சொன்னான்.கைப்பேசியில ஆர் கௌசியக்காவா? தாங்கோ நான் சொல்லுறன்."

" இந்தா"....

சொல்லியவாறே அயந்தண்ணை தனது கைப்பேசியை பெரியதம்பியிடம் கொடுத்தார்.

" ஓமக்கா.நான் தான் குடுக்கிறன்.
உங்களிடம் பிறகு கதைக்கிறன்.காசு பிரச்சினை இல்லை.நான் வாங்குறன்."

" அட நீயா குடுக்கிறாய்.நீயென்டால் சரி.நான் அவனுக்கு குடுக்கல்லை.அதான் சொன்னான்."

மொட்டையாக வசனங்களை குட்டையாக பேசி முடித்தார்கள்.

கௌசியக்காவின்ர கல்லை எடுத்து விற்கும் இடைத்தரகர் ஆகவும் பெரியதம்பி அப்போது செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் கௌசியக்காவின் மூத்த இரண்டு மகன்களும் தாசனிடம் தான் படித்தார்கள்.நல்லா படிப்பிக்கக் கூடியவன் தாசன் என்ற பெயரோடு அன்று நல்லா ஆசிரியராக இருந்தவனை மதித்து தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்பியவர்கள் தான் இன்று தாசனின் வறுமையால் அவனை நம்பக் கூட மறுத்து இழிவு படுத்துகின்றனர்.

.அவனது கற்பித்தலில் உயர்ந்த தன் பிள்ளைகளுக்கு நல்லதை சொல்லிக்கொடுக்கத் தெரிந்தவனிடம் நம்பிக்கை இல்லை.எல்லாம் காசினால் தீர்மானிக்கப்படுகிறது.

அன்று கல்வியில் வெறுமையாக இருந்த கௌசியக்காவின் பிள்ளைகள் படிக்க வந்த போது, உங்களை நம்ப முடியாது என்று தாசன் சொல்லி, படிப்பிக்க மறுத்திருந்தால், அந்த சூழலுக்கும் இன்றைய தாசனின் சூழலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அன்று அவர்களிடம் கல்வி இல்லை.இன்று தாசனிடம் காசு இல்லை.எல்லாம் வறுமை தான்.ஆனாலும் விளைவுகள் வேறாக்கி வதைக்கின்றன.

தாய்மாமனும் வாகனத்தோடு வந்து சேர்ந்து விட்டார்.கல்லை ஏற்றுவது தான் இனி வேலை.
பெரியதம்பி அந்த நேரம் அவ்விடத்துக்கு வந்திருக்கா விட்டால் இன்னும் நேரம் கடந்து போயிருக்கும்.அப்போதே நேரம் எட்டுமணி கடந்துகொண்டிருந்தது.

போதியளவு வெளிச்சம் இல்லை.யாரும் உதவிக்கு கல்லை ஏற்றுவதாக இல்லை.
தனியாளாக நின்று கல்லை ஏற்றி முடித்தான் தாசன்.

உழவியந்திரம் தாசனின் வீட்டை அடைந்தது.அங்கும் அவன் தனியாளாகத் தான் வேலையைத் தொடர்ந்தான்.

அந்த நேரத்தில் அவனது மனைவி கூட அவனது தாயின் பேச்சின் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தால்.உதவிக்கு போக வேண்டிய நேரமெல்லாம் சாட்டுச் சொல்லிக் கடத்திச் சென்றாள்.

அவனது அம்மா ஒரு படி மேல் போய் பெரியதம்பியிடம் " உவன் காசு தரமாட்டான்.உவனுக்கு யாரை நம்பி கல்லைக்கொடுத்தனி.என்னட்ட வரக்கூடாது காசுக்கென்டு." தாசனில் நம்பிக்கையினத்தை ஏற்படுத்தும் வண்ணம் கதைசொல்லி விட்டு வந்து விட்டார்.

திட்டக்காசு கட்டம் கட்டமாகத் தான் போடுவார்கள்.அத்திவாரம் கட்டி முடிச்சதும் அதுக்கான முழுக்காசும் கிடைக்கும்.ஒவ்வொரு வேலையாக பிரித்து அந்த அந்த வேலைக்கான காசுகள் கிடக்கும்.அந்த வேலை முடிந்த பின்னே அடுத்த கட்ட காசு கிடைக்கும்.

தாசனுக்குள்ள சிரமம் அத்திவாரம் கட்டி முடிக்கவில்லை.அத்திவாரக் காசு முழுசா போட்டுட்டாங்கள்.அந்த காசை எடுத்து காசும் செலவழிச்சு முடிஞ்சுது.அவனது அம்மாவும் மனைவியும் இணைந்து செய்த செயற்கரிய காரியம் அது.

வீட்டுத் திட்டம் வந்த போது தாசன் ஊரில் இல்லை.அவனது அம்மாவும் மனைவியும்  இணைந்து செயபற்பட்டனர்.எல்லா வழிமுறைகளிலும் வீடு கட்டி முடிப்பதனை தடுப்பதில் அவனது அம்மாவும் அம்மாவின் தங்கை மாலாவும் கூடிய கரிசனை கொண்டிருந்தனர்.இதனை உணராத அவனது மனைவியும் கூட்டுச் சேர்ந்து தோல்வி நோக்கி கூட்டிச் சென்று கொண்டிருந்தாள்.

நிலைமை மோசமானது கண்டு பொறுப்பை தானே எடுத்து நகர்ந்து போக நினைத்து தாசன் வீட்டு வேலைகளை தானே முடிவெடுத்து வேலை செய்யத் தொடங்கியிருந்தான் அப்போது.

எப்படியெல்லாம் குழப்பாலாமோ அப்படியெல்லாம் குழப்பம் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாசனின் அம்மா.ஏனோ தெரியவில்லை.

பெரியதம்பி கல்லுக்கு காசை உடனேயே தருமாறு அடுத்தநாள் கலையே வந்து விட்டார்.தாசன் தன் நிலைமையை நன்கு விளக்கியும் ஏற்றுக்கொள்ளாத பெரியதம்பி

 " உங்கட ஆக்கள் தான் சொல்றாங்கள்.உங்கள நம்ப வேண்டாம் என்டு.எனக்கு காசு வேணும்." 

" என்னட்ட இருக்கிறது எதையாவது உங்கட காசுக்கு ஏற்றதாக எடுத்துக்கொள்ளுங்கள்." 

" என்ன தான் இருக்கு உங்களிட்ட."

" தொலைக்காட்சி சமிக்கை உணரி மட்டுமே மிச்சம் இருக்கு.உங்களுக்கு உடன்பாடு என்றால்  எடுத்துக்கொள்ளுங்கள்."

"என்ன விலை போகும்.?"

"ஏழாயிரம் "

" என்னோட கல்லுக்கு ஆறாயிரம் தான் காசு.இந்தாங்கோ ஆயிரம் மீதி.அதை தாங்கோ"

தாசனிடம் இருந்த இறுதிப் பொருள் அது.நல்லாத் தான் இருந்தான்.நம்பிக்கைத் துரோகத்தால் இருந்த இறுதிப்பொருளும் 
இப்போது இல்லாது போச்சு.உள்ளூர பெரும் சோகம்.இருந்தும் உண்மை நிலை வெறுமை என்பதை நன்கு உணர்ந்திருந்தான் தாசன்.

" இந்தாங்கோ"

ஒற்றைச் சொல்லில் எல்லாம் போச்சு.
                                                                                                             ........ அன்புடன் நதுநசி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!